திருவாதவூர் தேனீ வாழ்க்கையும் அற்புதங்களும்
திருவாதவூரர்க்கு வயது ஏற ஏறக் கலைஞானங்களும் நிரம்பின. பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இவரது கல்வித் திறத்தையும் நல்லொழுக்கத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர்.
அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் என்பவன் ஆவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் அவரைத் தனது அவைக்கு அழைத்து அளவளாவி, அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான்.
திருவாதவூரரும் இது இறைவனுடைய ஆணையென்று எண்ணி அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை மிகக் கவனத்தோடு இயற்றி வந்தார்.
கீழைத்துறைமுகத்தில் அராபியக் குதிரைகளுடன் மரக்கலங்கள் வந்திருப்பதை அறிந்த பாண்டிய மன்னன், குதிரைகளை வாங்கி வரும் பணியை திருவாதவூரரிடம் ஒப்படைத்தார்.
அவரும் குதிரை வாங்கும் பொருட்டு பரிவாரங்களுடன் செல்லும் வழியில் திருப்பெருந்துறையை அடைந்தார். அவ்விடத்தை நெருங்கும் பொழுது வாதவூரர் உலக பந்தங்கள் அறுந்து ஆன்மீக நாட்டம் மிகுதியுற்றதை உணர்ந்தார்.
மேலும் செல்லும் பொழுது குருந்தமர நிழலில் குருநாதர் ஒருவர் தமது சீடர்களுக்கு உபதேசம் அளிக்கும் காட்சியை கண்டார். தான் மந்திரி தனக்கு அரசன் இட்ட பணி உண்டு என்பவை அனைத்தையும் மறந்தார்.
குதிரை வாங்க கொண்டுவந்த திரவியங்கள் அனைத்தையும் குருநாதரின் பாதங்களின் கீழ் வைத்து, குருநாதரை விழுந்து வணங்கி தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி நின்றார். குருநாதரும் தமது சீடனாக ஏற்றுக் கொண்டார்.
வாதவூரர் குதிரை வாங்க திரவியங்களை குருவுக்கு வழங்கியமையையும், பல நாட்களாகியும் அங்கேயே இருப்பதனையும் பணியாளர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர்.
பாண்டியன், வாதவூரரை அழைத்து வரும்படி தன் ஏவலாளியிடம் கட்டளையிட்டான். பாண்டிய மன்னனின் கட்டளையை தமது குரு நாதரிடம் எடுத்தியம்பினார் வாதவூரர். அதற்கு குருநாதர் “நீ மதுரைக்கு போ அங்கு ஆவணி மூல நாளன்று குதிரைகள் வரும் என்று பாண்டியனுக்கு கூறு” என்று கூறினார்
அத்துடன் அரசனுக்கு வழங்குமாறு விலைமதிப்பற்ற மாணிக்ககல் ஒன்றையும் கொடுத்தார். குருவின் சொற்படி வாதவூரர் மதுரைக்குச் சென்று அரசனிடம் குரு கூறியவற்றை அனைத்தையும் கூறினார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் ஆவணி மூலம் வரை காத்திருந்தார்.
இருப்பினும் அத்தினத்தில் குதிரைகள் ஏதும் வராததால், மன்னன் வாதவூராரை சிறையில் அடைத்து வருத்தினார். குறித்த நாளில் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளை பரிகளாக்கி தானே தலைமை மணிகளாக மதுரைக்கு கொண்டு சென்று மன்னரிடம் ஒப்படைத்தார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன் வாதவூரரை சிறை மீட்டு தனது வருத்தத்தை தெரிவித்தார். அன்று இரவே, பரிகள் எல்லாம் மீண்டும் நரிகளாக ஊளையிட்டு கலவரம் செய்து, தொழுவத்தில் உள்ள ஏனைய பரிகளையும் கடித்து குதறின.
செய்தி அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டு, வாதவூரரை சுடுமணலில் நிற்க வைத்து, நெற்றியில் கல் வைத்து சூரியனைப் பார்க்க வைத்து துன்புறுத்தினான். இறையருளால் அடைமழை பொழிந்து வைகை ஆறு பெருக்கெடுத்து ஊர்மனை எல்லாம் அடித்து சென்றது.
வாதவூரருக்கு தாம் செய்த துன்பமே அழிவுக்கு காரணம் என உணர்ந்த மன்னன் வாதவூராரை விடுதலை செய்தான். எதிர்காலத்தில் வைகையாறு பெருக்கெடுப்பதை தடுப்பதற்கு தடுப்பணை கட்டுமாறு ஊர் மக்களுக்கு மன்னன் கட்டளையிட்டான்.
அரசனின் அதிகாரிகள் ஆற்றின் கரையினை அளந்து ஒவ்வொரு குடிமக்களுக்கு உரிய பாகத்தினை அடையாளப்படுத்தினர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் பங்கில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பிட்டு விற்று வாழ்ந்துவந்த சிவ பக்தையான ஏழை மூதாட்டியான செம்மனச்செல்வி, தமது பங்கினை கட்டுவதற்கு வழியில்லாமல் இறைவனை தஞ்சம் என வேண்டி நின்றார்.
செம்மனச்செல்விக்கு உதவும் பொருட்டும், வாதவூரரின் மாண்பினை உலகுக்கு உணர்த்தும் பொருட்டும், சிவபெருமானே உதவி பொறியாளராக பணிபுரிய வந்தார். மூதாட்டி கொடுக்கும் உதிர்ந்த பிட்டை உணவாக உட்கொண்டுவிட்டு அணையை கட்ட உதவாது மர நிழலில் படுத்து உறங்கினார்.
இதனைப் பார்வையிட்ட காவலாளிகள் மன்னனிடம் கூற, மன்னன் பிரம்பினால் அவரது முதுகில் ஓங்கி அடித்தார். என்ன அதிசயம் கூலியாளாக வந்த சிவபெருமான் மறைய மன்னன் அடித்த அடி அனைத்து உயிரினங்களினது முதல் படிந்தது.
பின்னர் இறைவன் இடபரூபமாக தோன்றி, ” வாதவூரன் பொருட்டு எனது திருவிளையாடல்கள்” என்று கூறி மறைந்தார். மன்னன் வாதவூரரின் மகிமையை உணர்ந்து அவர் பாதம் பணிந்தார்.
பின்னர் மன்னனிடம் இருந்து விடைபெற்ற வாதவூரர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனை நோக்கி பாடல்கள் பாடினார்.
ஒருநாள் சிதம்பரத்தில் வாசம் செய்யும் போது, ஓர் அந்தணர் ஒருவர் வாதவூரரின் முன்வந்து, ” நீர் பாடிய பாடல்களை பாட விரும்பி அவற்றை உம்மிடம் போட்டு எழுதுவதற்கு வந்தேன்” என்று கூற வாதவூரர் திருக்கோவையார் பாடல்களை முறையே பாட அந்தணர் அவற்றை ஏட்டில் எழுதினார். பின்னர் அவர் மறைந்து விட்டார்.
அடுத்தநாள் தில்லையம் பெருமானுக்கு பூசை செய்ய வந்த பூசகர்கள் கோயில் படிக்கட்டு இருக்கக் கண்டு வியந்தனர். அதனை எடுத்து பார்த்தபோது, ” வாதவூரன் விளம்பிட அம்பலவன் எழுதியது” என்றதோடு “அழகிய சிற்றம்பலமுடையான்” என கையொப்பமும் இடப்பட்டிருந்தது.
செய்தியறிந்தவர்கள் பல மணிவாசகர் இடம் சென்று ” நீர் பாடிய பாடல்களுக்கு பொருள் யாது?” என வினவினர். அவர்களை அழைத்து சென்று சிதம்பர மூலவரான நடராஜப் பெருமானை காட்டி, ” இவரே அதன் பொருள்” என சொல்லி சிதம்பர ரகசியத்தில் கலந்தார்.
சிவத்தோடு இரண்டறக் கலத்தலே அப்பாடலின் பொருள் என மணிவாசகர் குறிப்பால் உணர்த்தினார்.
இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்தி சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக